கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 5 May 2018

தலைமைச் செயலகத் ஊழியர்களுக்கு...கு.வெங்கடேசன் அழைப்பு

தலைமைச் செயலகத் தோழர்களே வணக்கம். 

🖌 நமது பொதுவான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கடந்த ஜனவரி 2017ல் தொடங்கப்பட்டது.

🖌தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவினை உருவாக்குவதில் தலைமைச் செயலகச் சங்கத்தின் பங்கு என்பது அளப்பறியதாகும்.

🖌தொடங்கப்பட்ட நாள் முதல் பல்வேறுகட்ட ஜனநாயக அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

🖌பல்வேறு போராட்டடங்களை மேற்கொண்ட நாம், கடந்த 5-8-2017 அன்று ஒன்றரை இலட்சம் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களைத் திரட்டி மாபெரும் ஆர்பாட்டத்தினை நடத்தினோம்.

🖌அதன் விளைவாக, சிபிஎஸ் வல்லுநர் குழுவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்.

🖌கடந்த 7-9-2017 முதல் காலவறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை ஜாக்டோ ஜியோ மேற்கொண்டது.

🖌தலைமைச் செயலகப் பணியாளர்கள் கடந்த 14-9-2017ல் அன்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது என முடிவெடுத்தோம்.

🖌அதனைத் தொடர்ந்து, 15-9-2017 அன்று வேலைநிறுத்தத்தில் இறங்கினோம். ஆனால், நீதிமன்றம் அனைவரையும் வேலைக்குச் செல்லுமாறு ஆணையிட்டது.

🖌ஆனால், நமது ஒற்றுமையின் விளைவாக 22-9-2017 அன்று நீதிமன்றம் ஒரு மாத காலத்திற்குள் ஊதியக் குழுவினை அமல்படுத்திடுமாறு ஆணையிட்டது.

🖌இன்று நாம் உயர்த்தப்பட்ட ஊதியத்தினைப் பெறுகிறோம் என்றால் அதற்குக் காரணம் ஜாக்டோ ஜியோவோடு நாம் ஒன்றிணைந்து போராடியதுதான்.

🖌இருப்பினும், இன்றுவரை நாம் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையினை இழந்துள்ளோம்.

🖌உதவி பிரிவு அலுவலர்களுக்கான உயர்த்தப்பட்ட ஊதியமானது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

🖌இதன்பிறகு நடைபெற்ற சங்கத் தேர்தலில் புதிய ஐந்து நிர்வாகிகள் தேர்வாகினர்.

🖌பொதுவான கோரிக்கைகளோடு நமக்கான கோரிக்கைகளும் இன்றுவரை கோரிக்கைகளாகவே உள்ளன.

🖌22-9-2017 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான தலைமைச் செயலாளர் அவர்கள், வல்லுநர் குழுவின் அறிக்கையினை  30-11-2017க்குள் பெற்று, பரிசீலித்து உரிய ஆணைகளை வெளியிடுவோம் என்ற வாக்குறுதியினை அளித்தார்.

🖌ஆனால் இன்றுவரை ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் தலைமைச் செயலாளர் தான் நீதிமன்றத்தில் சொன்ன வாக்குறுதியினை நிறைவேற்றவில்லை.

🖌வல்லுநர் குழுவிற்கு தொடர்ச்சியாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

🖌ஜாக்டோ ஜியோ தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றது.

🖌கடந்த மார்ச்சு மாதத்தில் நான்கு நாட்கள் தொடர் மறியலை மேற்கொண்டு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கைதாகினர்.

🖌ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைச் செயலகச் சங்கத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளை நேரிடையாக சந்தித்து, தொடர் மறியலில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தனர். ஆனால், தலைமைச் செயலகச் சங்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

🖌தொடர்ச்சியாக நமது கோரிக்கைகளை அரசு செவிமடுக்காதபோது, 8-5-2017 அன்று கோட்டையினை முற்றுகையிடுவது என ஜாக்டோ ஜியோ முடிவெடுத்துள்ளது.

🖌இந்நிலையில், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆகியோரை வஞ்சிக்கும் வகையில் ஊழியர் பகுப்பாய்வு குழுவினை அமைத்து, தமிழக அரசு மேலும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது.

🖌இதோடு மட்டுமல்லாமல், ஊதிய முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவானது முரண்பாடுகளை மட்டுமே சரிசெய்யும் என்றும் ஊதிய மாற்றத்தில் தலையிடாது என்றும் அதன் வரையறைகளில் திருத்தம் வெளியிட்டது தமிழக அரசு.

🖌இவற்றையெல்லாம் மிக சக்தியுடன்வரும் மே 8 அன்று கோட்டை முற்றுகைப் போராட்டத்தினை நடத்துவதற்காக, மீண்டும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைச் செயலகச் சங்க நிர்வாகிகளை கடந்த 03.05.2018 அன்று நேரில் சந்தித்தனர்.

🖌கோட்டை முற்றுகையில் கலந்து கொள்வது குறித்து உரிய முடிவினை செயற்குழுவினைக் கூட்டி அறிவிப்பதாக தலைவர் அவர்கள் கூறினார்.

🖌தோழர்களே, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கூட்டுப் போராட்டத்தினால் மட்டுமே நம்மால் 1988ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தினை பெற முடிந்தது.

🖌தோழர்களே, நாம் பலமுறைப் போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்பட்டபோது, கடந்த 2003ல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒன்றுபட்டப் போராட்டத்தினால் அவற்றை எல்லாம் மீண்டும் பெற்றோம் என்பது வரலாறு. 

🖌தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் நாம் தலைமைச் செயலகத்திற்கு பூர்வ குடிமக்கள் அல்ல என்பதனை உணர வேண்டும்.

🖌தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 90 விழுக்காட்டினர் சென்னையினைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டடங்களைச் சேர்ந்த நாம், நம்முடன் படித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களில் பலர் தலைமைச் செயலகத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்காமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர்.

🖌தோழர்களே நம்முடைய நண்பர்களும் சொந்தங்களும் தான் இதுநாள்வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு நமது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர் என்பதனை நாம் உணர்வோம்.

🖌வருகின்ற செவ்வாய் மே 8 ஆம் தேதி இவர்கள்தான் நமது பொதுவான கோரிக்கைகளுக்காக அதிலும் குறிப்பாக வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அனைவருக்கும் பெறுவதற்கான கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் சென்னையை நோக்கி இலட்சக்கணக்கில் அணி திரள்கின்றனர்.

🖌நமது ஊரை விட்டு தலைமைச் செயலகத்திற்கு பணியாற்ற வந்து விட்டதால், போராடும் இவர்கள் கோரிக்கை வேறு – நமது கோரிக்கை வேறு என்றாகி விட்டதா?

🖌பல்வேறு கட்டப் போராட்டங்களை ஜாக்டோ ஜியோ நடத்தியபோது தலைமைச் செயலகப் பணியாளர்கள் நாம் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்விக் கணைகளை நம்மில் 90 விழுக்காட்டிற்று மேலானோர் நமது நண்பர்கள் மத்தியிலும் சொந்தங்கள் மத்தியிலும் எதிர் கொண்டிருப்போம். இதனை யாரும் மறுக்க முடியாது.

🖌தோழர்களே, தமிழக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தொடங்கப்பட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒன்றரை ஆண்டுகளாக ஒற்றுமையுடன் கூட்டமைப்பு நீடித்துக் கொண்டிருப்பது என்பது இதுவே முதல்முறை.

🖌இதற்கு முதன்மை காரணம் இதுவரை இதில் இடம்பெற்றுள்ள சங்கங்களின் ஒருங்கிணைந்த ஒற்றுமையுடன் கூடிய கூட்டு நடவடிக்கை.

🖌ஜாக்டோ ஜியோ எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், எந்தவொரு அடக்கு முறைக்கும் அஞ்சாது, நமது கோரிக்கைகளை வென்றெடுப்பதிலேயே கவனம் செலுத்துவது.

🖌தோழர்களே! நமது பொதுவான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு தனியொரு சங்கமாய் போராடினால் அதனை அடைய முடியாது.

🖌அதிலும் சிபிஎஸ் எனும் அரக்கனை அழிப்பதற்கு ஒன்றுபட்ட சக்தியே இப்போதைய தேவை.

🖌அந்த சக்தி என்பது ஜாக்டோ ஜியோதான்.

🖌நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்வதற்கான வரும் மே 8 கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் நமது சங்கம் விலகி நின்றாலும், நாமெல்லாம் அரசு ஊழியர்-ஆசிரியர் என்ற பேரினம் என்ற பெருமிதத்தோடு, ஜாக்டோ ஜியோவோடு நாம் களம் காண்போம்.

🖌நம் பின்னால் ஜாக்டோ ஜியோ என்ற பேரமைப்பு அரணாக உள்ளது என்ற பாதுகாப்பு உணர்வோடு போராட்ட களத்தில் இணைவோம்.

🖌ஒற்றுமை எனும் பதாகையினை உயர்த்திப் பிடித்து, நமது நண்பர்கள்-சொந்தங்கள் சென்னையினை நோக்கி கோட்டை முற்றுகைக்கு மே 8 அன்று வரும்போது, நானும் உங்களில் ஒருவன்தான் என்று முழுக்கமிட்டு, அவர்களோடு ஜாக்டோ ஜியோவோடு கை கோர்ப்போம்.

      இவண்
           கு.வெங்கடேசன்...

No comments:

Post a Comment